திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் கத்தோலிக்க சபை சார்பில் விவசாயிகள் பேரணி நடந்தது. ரப்பர் உள்பட விவசாய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தலச்சேரி பிஷப் ஜோசப் பேசியதாவது: ரப்பர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடந்த பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். ஒன்றிய அரசு நினைத்தால் ரப்பர் விலையை ரூ.250 ஆக உயர்த்த முடியும். தேர்தலில் ஓட்டாக மாறாத எந்த எதிர்ப்புக்கும் ஜனநாயகத்தில் மதிப்பு இருக்காது என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து ஒன்றிய அரசிடம் நம்முடைய கோரிக்கையை கூறுவோம்.
நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு நாங்கள் ஓட்டு போடுகிறோம். எங்களுக்கு ரப்பர் விலையை ரூ.300 ஆக உயர்த்தித் தந்தால் போதும். அதற்கு சம்மதித்தால் கேரளாவில் ஒரு எம்பி இல்லை என்ற நிலைமை பாஜகவுக்கு மாறும். இவ்வாறு அவர் பேசினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை கவர்வதற்கு பாஜக முயன்று வருகிறது. இந்தநிலையில் தலச்சேரி பிஷப்பின் இந்தப் பேச்சு பாஜகவுக்கு உற்சாகம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிஷப்பின் இந்தப் பேச்சுக்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்பட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளும் பிஷப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.