புதுடெல்லி: பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறி இருந்தது தொடர்பாக விசாரிக்க டெல்லி போலீசார் இன்று அவரது வீட்டிற்குச் சென்றனர்.
சமீபத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பேசும்போது, பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என குறிப்பிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், இது குறித்த கேள்விகளை அனுப்பி பதில் அளிக்குமாறு கோரி இருந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நேரில் விசாரிக்க டெல்லி சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான போலீசார் ராகுல் காந்தியின் வீட்டிற்குச் சென்றனர். ”பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியவர்கள் குறித்து தன்னிடம் இருக்கும் விவரங்களை ராகுல் காந்தி காவல்துறைக்கு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பது தெரிந்தால்தான் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை எங்களால் அளிக்க முடியும்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ராகுல் காந்தியின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ”இந்திய ஒற்றுமை யாத்திரை முடிந்து 45 நாட்கள் ஆகின்றன. உண்மையிலேயே டெல்லி போலீசாருக்கு அக்கறை இருந்திருந்தால், இத்தனை நாட்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள்? ஏன் அவர்கள் கடந்தை மாதமே வரவில்லை? டெல்லி போலீசாருக்கு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சட்டப்படி உரிய பதிலை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.
”சரியான காரணமின்றி ராகுல் காந்தியின் வீட்டிற்கு காவல்துறை சென்றுள்ளது என்றால் அது அமித் ஷாவின் அனுமதி இன்றி நடந்திருக்காது. ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் தொடர்பாக அவர் பதில் அளிப்பார். ஆனால், தற்போதே ஏன் போலீசார் அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்று ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி விகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பி வரும் கேள்விகள் பிரதமர் மோடியை எந்த அளவு அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதையே இந்த நாடகம் உணர்த்துவதாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.