பாட்னா: பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், 2004 முதல் 2009 வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மத்திய ரயில்வே அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது, ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிபிஐயும் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. நிலத்தை லஞ்சமாக பெற்று 4,000-க்கும் மேற்பட்டோருக்கு ரயில்வே துறையில் வேலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
இந்த ஊழல் தொடர்பான முக்கியமான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. அதில் வேலை வழங்கப்பட வேண்டியவர்களின் பெயரும், அவர்களது விண்ணப்பங்கள் அனுப்பட்ட ரயில்வே மண்டலங்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. வேலைக்காக நிலத்தை லஞ்சமாக கொடுத்தவர்கள் பெரும்பாலானோர் பிஹாரின் குறிப்பிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்கென்று லாலு பிரசாத் அவரது பாட்னா அலுவலகத்தில் தனிப் பிரிவை உருவாக்கியதாகவும், வேலை வாங்கித் தரப்பட வேண்டியவர்களின் விண்ணப்பங்கள் இங்குதான் பெறப்பட்டதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லாலு பிரசாத் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கம், ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்த வழக்கில் பிஹார் துணை முதல்வரும் லாலு மகனுமான தேஜஸ்வியை இந்த மாதத்தில் கைது செய்ய மாட்டோம் என்று சிபிஐ தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 25-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராவார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
லாலு, அவரது மனைவி மற்றும் மகளுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.