திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவலை முகநூல் பக்கத்தில் பதிவிட்ட நபர் பிஹாரில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி மற்றும் பொய் செய்திகளை சிலர் பரப்பி வந்தனர். இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு உதவி பெறும் வகையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கடந்த 2 வாரங்களாக செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு அறையில் அவிநாசி காவல் நிலைய முதல் நிலை காவலர் வேல்முருகன் இருந்தபோது, கடந்த 4-ம் தேதி இரவு 10 மணிக்கு தனது முகநூல் பக்கத்தை பயன்படுத்தியபோது, ஹெட்லைன்ஸ் பிஹார் என்ற முகநூல் பக்கத்தில் தமிழகத்தின் திருப்பூரில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் படுகொலை செய்யப்பட்டதாக தவறான தகவல் பதிவிட்டதை பார்த்தார். இவ்வாறு பரப்பப்பட்ட பொய்யான வதந்தியானது, மக்களிடையே பொது நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாகும். இது தொடர்பாக முதல்நிலை காவலர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்படி, காவல் துணை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் சித்ராதேவி, தலைமைக்காவலர் சந்தானம், முதல்நிலைக் காவலர்கள் கருப்பையா, முத்துக்குமார் மற்றும் காவலர் குமரவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை கடந்த 10-ம் தேதி பிஹார் மாநிலத்துக்கு சென்றிருந்தனர்.
பிஹார் மாநில காவல்துறை உதவியுடன், ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று விசாரணை செய்ததில், அங்கு இல்லாத நிலையில் அவரது அலைபேசி சிக்னலை தொடர்ந்து கண்காணித்ததில் ரத்வாரா என்ற இடத்தில் அந்த நபர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிஹார் மாநிலம் ஹத்தாரி பர்ஹாடு கிராமத்தை சேர்ந்த உபேந்திரா ஷனி (32) கைது செய்தனர்.