ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க கல்வி கடன் வாங்கியவர்கள் செலுத்திய பிரிமியம் பணத்தை கையாடல் செய்த வழக்கில், வங்கி உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்
வேலூர் எஸ்பிஐ (SBI) வங்கியில் கல்வி கடன் வாங்கிய மாணவர்கள் தங்களது பிரீமியம் தொகையை செலுத்தி வந்துள்ளனர். தங்களின் கடனில் மீதம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பது குறித்து வங்கியில் விசாரணை செய்தபோது, பல மாணவர்களின் கல்விக் கடன் பிரீமியம் தொகை செலுத்தாமல் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை செய்ததில் வங்கியின் உதவி மேலாளர் அந்த பணத்தை கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து வங்கி உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியனை கைது செய்த போலீசார், அவரிடம் கிடக்குப்பட்டி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தவித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனை சரி செய்ய கல்வி கடன் செலுத்திய பிரீமியம் பணத்தை, யோகேஸ்வர பாண்டியன் தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.
மேலும், கல்விக்கடன் பிரிமியம் தொகை 34 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை யோகேஸ்வர பாண்டியன் தனது வங்கி கணக்கு மாற்றி மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த நான்காண்டுகளில் 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்ட வந்த நிலையில், வங்கி உதவி மேலாளர் ஒருவர் கல்விக் கடன் பிரிமியம் தொகையை கையாடல் செய்து கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.