அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாக வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இதனை தடுக்க ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை மீண்டும் நாடியிருக்கும் சூழலில், வைத்தியலிங்கம் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்திருப்பதுடன், ஆண்மகனாக இருந்தால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் பொது இடத்தில் வாக்கு பெட்டியை வைத்து வெற்றி பெற்று பார், நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வரவே முடியாது என சவால் விட்டுள்ளார்.
வைத்தியலிங்கம் பேச்சு
தஞ்சாவூரில் வடக்கு – தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய வைத்திலிங்கம்,
சசிகலா சிறையில் இருந்து வரக்கூடாது என நினைத்தவர் இபிஎஸ். பொதுக்குழு தேர்தலில் ஆண் மகனாக இருந்தால் பொது இடத்தில் பெட்டி வைத்து வாக்கு பெற்று வெற்றி பெற்று பார். எட்டு முறை தேர்தலில் தோல்வி அடைந்தவர். முதலமைச்சராவதற்கும், இந்த கழகத்தின் தலைவர் ஆவதற்கும் எடப்பாடிக்கு தகுதி இல்லை. எடப்பாடி கையில் கட்சி போனால் ஜாதி கட்சியாக மாறிவிடும். எந்த ஜாதிக்கும் சொந்தம் இல்லை அதிமுக என தெரிவித்தார்.
நீதிமன்றம் மூலம் தீர்வு
அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என கூறியிருக்கிறார். அவர் ஒரு மாநில தலைவர் தான். முடிவெடுக்க வேண்டியது பாரதிய ஜனதாவின் இந்திய தலைவர் ஜே பி நட்டா அவர்கள். பொதுச் செயலாளர் பிரச்சினையில் நீதிமன்ற படி எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். ஏனென்றால் சட்ட விதிகள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இன்னமும் தேர்தல் கமிஷனில் ஒருங்கிணைப்பாளர் என்று தான் இருக்கிறது. அதனால் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
எடப்பாடி வெற்றி பெற முடியாது
சட்ட விதிகள் படி என்னென்ன ஆவணங்கள் செலுத்த வேண்டுமோ அனைத்தையும் நாங்கள் செலுத்துவோம். டிடிவியாக இருந்தாலும் – சசிகலாவாக இருந்தாலும் கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். இது கூடிய விரைவில் நடக்கும். நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வரவே முடியாது. பாக்கெட் திருடன் செய்வதை போல எடப்பாடி பழனிச்சாமி தற்போது இந்த வேலையை செய்து கொண்டுள்ளார். திமுக-வினர் காவல் நிலையத்தில் சென்று அவர்கள் கட்சியினரையே தாக்கியது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது காண்பிக்கிறது என தெரிவித்தார்.