சூப்பர்ஸ்டார் தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. குணச்சித்திர நடிகராக தன் திரைப்பயணத்தை துவங்கி பின்பு வில்லனாக மிரட்டி மெல்ல மெல்ல ஹீரோவாக முன்னேறி சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடைந்தார் ரஜினி. இவரின் திரைவாழ்க்கையில் தோல்வி படங்கள் என்பதை நாம் விறல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு வெற்றி படங்களாக கொடுத்து வந்த ரஜினி கடந்த பத்து வருடங்களாக ஒரு வெற்றிப்படத்திற்காக போராடி வருகின்றார். எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் வெற்றியை பெற்று தரவில்லை
நம்பிக்கை ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் துவங்கும் போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்திலிருந்து வெளியான வீடியோக்கள் தான். மோகன்லால், ஷிவ்ராஜ்குமார் என தென்னிந்திய சூப்பர்ஸ்டார்கள் இப்படத்தில் இடம்பெற்றதும் பான் இந்திய படமாக மாறியது ஜெயிலர். மேலும் படத்திலிருந்து வெளியான கிலிம்ப்ஸ் வீடீயோவை பார்த்ததும் படத்தில் கண்டிப்பாக ஏதேனும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் இப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பி வருகின்றார் ரஜினி
எதிர்பாராத கூட்டணி ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இப்படத்தில் நாயகர்களாக நடிக்க ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து ரஜினியின் 171 ஆவது திரைப்படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. சிபி சக்கரவர்த்தி, பிரதீப் ரங்கநாதன் என பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட தற்போது ஜெய் பீம் படத்தை இயக்கிய T .J ஞானவேல் தான் ரஜினியின் 171 படத்தின் இயக்குனர் என்பது முடிவாகியுள்ளது. இந்த கூட்டணி கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ரஜினி கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடிப்பார் என்பதால் ஜெய் பீம் போன்ற ஒரு புரட்சிகரமான படத்தை இயக்கிய ஞானவேலுடன் ரஜினி கூட்டணி அமைப்பது ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகின்றது
இயக்குனர் அமீரின் பேச்சுஇந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான அமீர் ரஜினியை பற்றி பேசிய பேச்சு தான் தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது ஷங்கரின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில விருது ரஜினிக்கு கிடைத்தது. இதைப்பற்றி பேசிய அமீர், ரஜினி ஒரு சிறந்த நடிகரா ? சிவாஜி படத்தில் ரஜினி தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாரா ? அவர் ஒரு என்டர்டெயினர் அவ்வளவுதான். ரஜினி முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் தான் அவரின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதற்கெல்லாம் ஏன் விருது கொடுக்கவில்லை என பேசியுள்ளார் அமீர். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வழங்கப்படும் விருதுகள் எல்லாமே லாபி தான் என்பதை உணர்த்தவே அமீர் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது