நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பவதாது. “நான் சென்னை, போயஸ்கார்டன், ராகவேந்திரா அவென்யூவில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய லாக்கரில் விலை உயர்ந்த வைர மற்றும் தங்க நகைகளை வைத்திருந்தேன். 2019-ல் என்னுடைய தங்கையின் திருமணத்தின் போது அந்த நகைகளை அணிந்திருந்தேன். திருமணத்துக்குப்பிறகு மீண்டும் அவைகளை வீட்டு லாக்கரில் வைத்துவிட்டேன். நான் என்னுடைய கணவர் வீட்டிலிருந்து அப்பா வீட்டுக்கு என மூன்று தடவை என்னுடைய பொருள்களை இடமாற்றினேன்.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி போயஸ் கார்டன் வீட்டுக்கு நகைகளை வைத்திருந்த லாக்கரை கொண்டு வந்தோம். லாக்கரின் சாவிகள் வைத்திருக்கும் இடம், என்னுடைய வீட்டில் வேலைப்பார்க்கும் ஈஸ்வரி, லட்சுமி மற்றும் டிரைவர் வெங்கட் ஆகியோருக்குத் தெரியும். கடந்த 10.2.2023-ம் தேதி லாக்கரை ஓப்பன் செய்து பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். அதிலிருந்த விலை உயர்ந்த வைர மற்றும் தங்க நகைகள் திருட்டுப் போயிருந்தன. அதில், 60 சவரன் நகைகள், வைர நகைகள், நவரத்தின கற்கள் முதலியவை அடங்கும்.
அதனால் என்னுடைய வீடு முழுவதும் நகைகளைத் தேடியும் கிடைக்கவில்லை. எனவே எனக்கு வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரி, லட்சுமி, டிரைவர் வெங்கட் ஆகியோர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே திருடப்பட்ட நகைகளை மீட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன்பேரில் தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கனி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இதகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் கூறுகையில், “ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர, தங்க நகைகள் நவரத்தின கற்கள் பதித்த நகைகள் திருட்டு போயிருப்பதாக புகாரளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாக புகாரில் தெரிவித்திருக்கிறார்கள். அதனால் எங்கு வைத்து இந்த நகைகள் திருடப்பட்ட என்பதை கண்டறிய வேண்டும். மேலும் புகாரில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் அவர்களிடமும் நகைகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.