புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேளாண் விற்பனைக் கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் திலகம். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பணிக்காலத்தில் இருக்கும் போதே திடீரென உயிரிழந்தார்.
இதனால், திலகத்தின் மகள் பர்வதவர்த்தினி தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவர் திருமணமானவர் என்பதால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பர்வதவர்த்தினி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, வாரிசுப் பணி வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து, இந்த மனுவை வேளாண் விற்பனை சங்க செயலர் மூன்று மாதத்தில் பரிசீலிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, “வேளாண் விற்பனை துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய திலகம் என்பவர் 2019 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
இதனால், திருமணமான அவரது மகள் கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், அவருக்கும் கருணை அடிப்படையிலான பணியைப் பெற உரிமையுள்ளது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக விதிகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளும் அந்த விதியை தெளிவுபடுத்தியுள்ளன.
ஆகவே, இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ஆறு மாதங்களுக்குள்ளாக கருணை அடிப்படையில் பணியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.