மதுரை: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு தமிழகத்தை சீரழித்து வைத்திருந்தது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் ஜனநாயகத்தை மத்திய அரசு சிதைத்து வருகிறது என்று ராகுல்காந்தி பேசி உள்ளார். ஜனநாயக முறைப்பாடுகளை அவர் குற்றம் சாட்டவில்லை. சிறந்த இந்திய ஜனநாயகத்தை அவர்கள் பாழ்படுத்துகிறார்கள் என்று தெரிவித்து உள்ளார். இதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயகத்தை பற்றி பா.ஜனதாவிற்கு ஒன்றும் தெரியாது.
அதானி ஊழல் செய்தது குறித்து பேசினால் தேசத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகின்றனர். பொது மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். அதானிக்கு சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு உதவிகள் செய்துள்ளனர். அது தற்போது வெளியே வந்துள்ளது. அதற்காக காங்கிரஸ் பற்றி பொய்யான பரப்புரையை அவர்கள் செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கிராமம் தோறும் சென்று பொதுமக்களிடம் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு தமிழகத்தை சீரழித்து வைத்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போதை ஒழிப்பு பிரச்சினையில் தீவிரமாக இறங்கி பல்வேறு கைது நடவடிக்கைகளை செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுகின்றனர். நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் அதுபோல கூறலாம். ஆனால் இங்கு தப்பு செய்பவர்கள் உடனடியாக தண்டனை பெறுகின்றனர். தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இருப்பதால் மிகவும் கவனத்தோடு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தண்டித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.