சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம், ஆனால் வரும் மார்ச் 24-ம் தேதிவரை முடிவை அறிவிக்க கூடாதுஎன்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவித்து அவற்றைரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குதொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு, விசாரணையை ஏப்.11-ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு கடந்த 17-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மனு தாக்கலுக்கான அவகாசம் நேற்று முடிவடைந்தது. இபிஎஸ் மட்டுமே மனு தாக்கல் செய்த நிலையில், போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டதாக நேற்றே அறிவிக்க அவரது தரப்பினர் திட்டமிட்டிருந்தனர்.
இந்த சூழலில், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளதால், பொதுச் செயலாளர் தேர்தலை அவசர கதியில் நடத்தக் கூடாது என தடை விதிக்குமாறும், இதுதொடர்பான மனுவை அவசரவழக்காக விசாரிக்கக் கோரியும்மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புதலைமை நீதிபதி டி.ராஜாவிடம் முறையிடப்பட்டது.
அவரது அனுமதியின்பேரில், உயர் நீதிமன்றத்தில் விடுமுறை நாளான நேற்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு இது அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நடந்த வாதம்:
மனோஜ்பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.மணிசங்கர், ஜேசிடி பிரபாகர் தரப்பில் மூத்தவழக்கறிஞர் ஸ்ரீராம்: பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்துஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலை அவசர கதியில் நடத்திமுடிக்க திட்டமிட்டது தவறு. தேர்தலுக்கு தடை விதிக்காவிட்டால், இன்று (மார்ச் 19) மாலையே இபிஎஸ்ஸை அதிமுக பொதுச் செயலாளராக அறிவித்துவிடுவார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்னும்காலாவதியாகாத சூழலில், பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த முடியாது. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவிக்கே தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகாரம் தரவில்லை. எனவே, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்.
இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்: அதிமுகவின் அஸ்திவாரத்தையே உலுக்கும் வகையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்தான் கட்சியில் இருந்து இந்த மனுதாரர்கள் நீக்கப்பட்டனர். உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. தவிர, இத்தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் எந்த வழக்கும் தொடரவில்லை.
பொதுச் செயலாளர் பதவிக்குஇபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக 37 பேர் அவரது பெயரில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். கட்சி விதிகளுக்கு உட்பட்டு, ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்தின்படியே இத்தேர்தல் நடைபெறுகிறது.
கட்சியில் ஓபிஎஸ்ஸுக்கு1 சதவீத ஆதரவுகூட கிடையாது. 8 மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தற்போது காலம் கடந்து பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்க்கின்றனர். எனவே, தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது.
நீதிபதி: பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஏற்கெனவே தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைஏப்.11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலை அவசர கதியில் நடத்த என்ன அவசியம்?
இபிஎஸ் தரப்பு: மக்களவை தேர்தல் நெருங்குகிறது. வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதற்காக, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்தது போலவேதான், இந்த தேர்தலும் நடத்தப்படுகிறது. இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து நீதிபதி குமரேஷ்பாபு, ‘‘அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். முடிவுகளை மார்ச் 24 வரைஅறிவிக்கக் கூடாது. ஏற்கெனவேஏப்.11-க்கு தள்ளிவைக்கப்பட்ட பிரதான வழக்கு, விடுமுறை தினமாக இருந்தாலும் மார்ச் 22-ல்விசாரிக்கப்படும். பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் மார்ச் 24-ல் தீர்ப்பு வழங்கப்படும்’’ என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.