ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் டிவியில் ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் டிவிக்களில் தனியார் நகைக்கடை, துணிக்கடை விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும். இதன் மூலம் மாதந்தோறும் ரயில்வே துறைக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும்.
அதே போல் அரசு நலத்திட்டங்களும் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால் பீகாரில் உள்ள ரயில் நிலையத்தில் டிவியில் ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் பாட்னா ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் பல நடைமேடைகளில் டிவிக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதில் சில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் சில நேரங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.
அந்த வகையில் சம்பவத்தன்று நடைமேடை 10இல் அமைக்கப்பட்டிருந்த டிவியில் திடீரென மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்து ஆபாச படம் ஒளிபரப்பானது. இதனை கண்ட பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
இதுகுறித்து பயணிகள் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் இதனை யார் செய்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான காட்சியை அங்கிருந்த பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in