டெல்லி: ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆனால், கடந்த வாரம் முழுவதும் தொடர் அமளி ஏற்பட்டதால் ஒரு மசோதாவை கூட விவாதம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல இன்று காலை இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தில் ஈடுப்பட்டனர். மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு, அதானி விவகாரத்தை எழுப்பி இரு தரப்பும் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் முடங்கின.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு வெளியேறி அவைத்தலைவர் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் 6வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. ஏற்கனவே கடந்த 5 நாட்களாக விவாதம் எதுவும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியிருந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்களின் அமளியால் 6வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.