ஆஸ்கர் விருது பட நாயகனிடம் ஒப்படைக்கப்பட்ட தர்மபுரி யானைக்குட்டி
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவிலிருந்து பங்கெடுத்துக் கொண்ட ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவிலும் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்டரி படம் என்கிற பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற டாக்குமென்டரி படம் முதுமலை யானைகள் பராமரிப்பு முகாமில் அனாதையாக வந்த ரகு மற்றும் பொம்மி என்கிற இரண்டு யானைகளை பராமரித்து வளர்த்த பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியரின் அர்ப்பணிப்பு உணர்வு, யானைகளிடம் அவர்கள் காட்டும் பாசம் ஆகியவை குறித்து உணர்வு பூர்வமாக உருவாக்கப்பட்டு இருந்தது.
அதேசமயம் இந்த டாக்குமென்ட்ரிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட அந்த சமயத்தில் இந்த படத்தின் நாயகனாக நடித்திருந்த பொம்மன் கூறும்போது சமீபத்தில் தர்மபுரி அருகில் உள்ள பாலக்கோடு பகுதியில் மின்சாரம் தாக்கி இறந்த யானைகளின் இரண்டு குட்டிகள் பொதுமக்களால் துரத்தி அடிக்கப்பட்டன என்றும் அவற்றை தேடி கண்டுபிடித்து ரகு, பொம்மி யானைகளை வளர்த்தது போல வளர்க்கப் போகிறேன் என்றும் அந்த பொறுப்பை வனத்துறை தன்னிடம் ஒப்படைத்து இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே தர்மபுரி அருகே தாயை பிரிந்த குட்டி யானை ஒன்றை வனத்துறையினர் மீட்டு தற்போது அதை வளர்க்கும் பொறுப்பை பொம்மனிடமே வழங்கி உள்ளனர்.