புதுடெல்லி: இந்திய ஜனநாயகத்தில் தலையிட வெளிநாடுகளுக்கு ராகுல் அழைப்பு விடுத்தது மிகவும் வெட்கக்கேடான செயல் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தெரிவித்தார்.
சென்னையில் பாஜக கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் ‘தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தை’ தொடங்கி வைத்த பிறகு காணொலி காட்சி மூலம் ஜே.பி.நட்டா பேசியதாவது:
அந்நிய மண்ணில் இந்திய ஜனநாயகத்தின் விழுமியங்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் செயல் ஏற்க முடியாதது. அதுமட்டுமின்றி, இந்திய ஜனநாயகம் அச்சுறுத்த லில் இருப்பதாக கூறி, இந்த விஷயத்தில் வெளிநாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ரீதியில் அவர் உதவிக்கு அழைத்துள்ளார். இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட அந்நிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி மனதளவில் திவாலாகிவிட்டது என்பதையே எடுத்துக் காட்டியுள்ளது.
ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இங்கு எந்த இடமும் இல்லை. அதுபோன்றவர்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும்.
ராகுல் காந்தியின் செயலை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பொறுத்துக் கொள்கிறார்கள் என் பதே உண்மை. ஜனநாயகத்தின் அனைத்து எல்லைகளையும் அவர் மீறியுள்ளார். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.
தொழிலதிபர் அதானியின் விவகாரத்தை திசை திருப்பவே ராகுல் காந்தி பிரிட்டனில் பேசிய கருத்துகளை பாஜக தவறாக சித்தரித்து சர்ச்சையாக்கி வரு வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.