தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்தும் விதமாக விளங்குவது உயர்நீதிமன்றம். இது நாட்டின் இரண்டாவது உயர் நீதிமன்ற வளாகம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வளாகத்தின் அருகே என்.எஸ்.சி. போஸ் சாலையில் நேற்று திடீரென டிரோன் கேமரா பறந்துள்ளது. இதைபார்த்த உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு போலீசார், சம்பவம் தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயர்நீதிமன்றம் அருகே டிரோன் கேமராவை பறக்க விட்ட சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த வித்யாசாகர், விக்னேஸ்வரன் மற்றும் கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா உள்ளிட்ட மூன்று பேரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.
அப்போது, அவர்கள் மூன்று பெரும் அனுமதி இல்லாமல் டிரோன் கேமராவை பறக்கவிட்டு படம் பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, பின்னர் எச்சரிகை விடுத்து ஜாமீனில் விடுவித்தனர்.