கீவ்: உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரியுபோல் சென்ற புதின் அங்கு என்ன செய்தார் என்ற கேள்விகள் வலம் வந்து கொண்டிருந்தன. இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷ்ய போரில் மரியுபோல் உள்ளிட்ட சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இந்த நிலையில் மரியுபோல் பகுதிக்கு சனிக்கிழமை இரவு, புதின் திடீரென புதின் பயணம் செய்தார். உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய பிறகு புதின் மேற்கொண்ட முதல் பயணம் இது. புதினுடன் ரஷ்யாவின் துணை பிரதமர் மராட் குஸ்னுலினும் உடன் சென்றிருந்திருந்தார்.
என்ன நடந்தது.? – இப்பயணத்தில் மரியுபோலில் உள்ள நெவ்ஸ்கி நகருக்குத்தான் புதின் முதலில் சென்றார். பயணத்தில் நகரை மீட்டுருவாக்கம் செய்வது குறித்துதான் புதின் முக்கியமாக அதிகாரிகளிடம் அலோசனை நடத்தி இருக்கிறார். மேலும், சூழல் குறித்து உள்ளூர்வாசிகளுடனும் புதின் பேசி இருக்கிறார். நகரின் சீரமைப்பு புகைப்படங்களையும் புதினுக்கு அதிகாரிகள் காண்பித்தனர்.
புதின் வருகை குறித்து நாடு கடத்தப்பட்ட மரியுபோலின் உக்ரைனிய மேயர் வாடிம் பாய்சென்கோ பிபிசியிடம் பேசும்போது, ”மரியுபோலுக்கு ரஷ்யா என்ன செய்துள்ளது என்பதை பார்க்கவே அவர் வந்திருக்கிறார். உக்ரைனின் வேறு எந்த நகரமும் மரியுபோல் போல அழிக்கப்படவில்லை. வேறு எந்த நகரமும் இவ்வளவு காலம் முற்றுகையிடப்பட்டதில்லை. வேறு எந்த நகரமும் இந்த அளவு பாதிக்கப்படவில்லை. மரியுபோலுக்கு ரஷ்யா என்ன செய்துள்ளது என்பதை பார்க்கவே அவர் வந்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் முதலே மரியுபோல் நகரில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது, அந்நகரில் இருந்த உக்ரைனின் கொடிகள் நீக்கப்பட்டு ரஷ்ய கொடிகள் நடப்பட்டன. மேலும் தெருவின் பெயர்களும் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.