அயோத்தி: உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்ய நாத் பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந் ததையடுத்து, அவர் ஹனுமன் மற்றும் ராம் லல்லா கோயில்களில் நேற்று வழிபாடு செய்தார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் மடத்தின் தலைவரான யோகி ஆதித்யநாத், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி மாநில முதல்வராக பதவியேற்றார். கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 25-ம்தேதி யோகி ஆதித்யநாத் 2-வது முறை யாக முதல்வராக பதவியேற்றார்.
உ.பி. முதல்வராக பதவியேற்று நேற்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஹனுமன் மற்றும் ராம் லல்லா கோயில்களில் மாநில நலனுக்காக வழிபாடு செய்தார். ராம் லல்லா கோயிலில் தரிசனம் செய்த யோகிக்கு ஸ்ரீ ராம்ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் நினைவுப் பரிசு வழங்கினார்.
ராமர் கோயிலில் ஆய்வு
2024 ஜனவரியில் திறக்கப்பட உள்ள ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் நலன் குறித்தும் யோகி கேட்டறிந்தார். அப்போது 70% கட்டுமானப் பணி முடிந்துவிட்டதாக யோகியிடம் தெரிவிக்கப்பட்டதாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வாரணாசி சென்ற முதல்வர் யோகி ஆதித்ய நாத், அங்கு உள்ள காசி விஸ்வநாதர் மற்றும் கால பைரவர் கோயில்களில் பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 6 ஆண்டுகளில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 100 முறை சென்ற ஒரே முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது.