கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. இதில் அதிமுக 38 தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது.
அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அதிமுக ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதற்கிடையே தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்று பாஜக நிர்வாகிகள் கூறி வருவது அதிமுகவினருக்கு பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- “இனி வரும் ஆண்டுகளில் தமிழக அரசியலில் பணம் இல்லாமல் ஒரு தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. எனக்கு இதில் ஒரு தனி மனிதனாகவும், பாஜக கட்சியின் தொண்டனாகவும் மாநில தலைவராகவும் உடன்பாடு இல்லை.
தமிழகத்தில் மிகப்பெரும் அரசியல் மாற்றத்திற்கு மக்கள் காத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஓட்டுக்கு பணம் கொடுக்காத அரசியலுக்கு காத்திருக்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவெடுப்பதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. அதனை கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்களிடம் நான் பேசி வருகிறேன்”என்றுத் தெரிவித்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி சார்பாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், “எடப்பாடி பதறட்டும் ! கோபாலபுரம் கதறட்டும்” என்றும் “இவர் திராவிட அண்ணா இல்லை, சங்கிகளின் அண்ணா” என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் பாஜக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் அதிகரித்துள்ளது.