மும்பை,
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. அதனால் அவர் இந்த ஐபிஎல் சீசனுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை தோனி இந்த வருட ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெற்றால் சென்னை அணி நிர்வாகம் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். தோனியின் ஓய்வு குறித்து தகவல்கள் வெளிவரும் நிலையில் இது தொடர்பாக அவரது தரப்பில் இருந்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் இது என்று நான் நினைக்கவில்லை, தோனி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு விளையாடலாம் என சென்னை அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் இது என்று நான் கேள்விபட்டேன். ஆனால், நான் அவ்வாறு நினைக்கவில்லை. தோனி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு விளையாடலாம். அவர் இன்னும் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். மேலும், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் நன்றாக செயல்படுகிறார்.
அவரது ஆட்டத்தை போலவே அவரது கேப்டன்ஷிப்பும் மிகவும் சிறப்பான ஒன்று. அவரது உடற்தகுதி மற்றும் ஆட்டத்தை புரிந்து கொள்ளும் திறன் அவரை ஒரு சிறந்த கேப்டனாக்குகிறது. மைதானத்தில் அவரது திறமை அபாரமானது. சிஎஸ்கே வெற்றி பெற தோனியும் ஒரு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.