நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக புகார் அளித்திருந்த நிலையில், அந்த நகைகளின் மதிப்பு குறித்த கதவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் ‘3’, கௌதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர், தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்திலும் மற்றும் ரஜினிகாந்த் – ஜீவிதா சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஹோலி பண்டிகையின்போதுதான் துவங்கியது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார். இதனால், படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிசியாக உள்ளார்.
இந்நிலையில், தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வைர நகைகள், பழங்கால தங்க நகைகள், நவரத்தினம் நகைகள், தங்கத்துடன் கூடிய முழு பழங்கால வைரநகைகள், ஆரம், நெக்லஸ் மற்றும் சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 3 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2019-ம் ஆண்டு தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு நகைகளை பயன்படுத்திய பின்னர், நகைகளை லாக்கரில் வைத்திருந்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது புகாரில் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை, அது செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்தது; பின்னர் அது சி.ஐ.டி. காலனியில் நடிகர் தனுஷுடன் அவர் பகிர்ந்து கொண்ட குடியிருப்புக்கு மாற்றப்பட்டது; மீண்டும் செப்டம்பர் 2021-ல் செயின்ட் மேரிஸ் சாலை அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டது; அங்கிருந்து ஏப்ரல் 9, 2022 அன்று, நகைகள் அடங்கிய லாக்கர் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், லாக்கரின் சாவிகள் செயின்ட் மேரிஸ் சாலை குடியிருப்பில் உள்ள தனது தனிப்பட்ட இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டிருந்தன; இது தனது பணியாளர்களுக்குத் தெரியும்; தான் இல்லாதபோது அவர்களும் அடிக்கடி அபார்ட்மெண்டிற்கு செல்வார்கள் என தனது புகாரில் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி லாக்கரைச் சரிபார்த்தபோது, திருமணமான 18 ஆண்டுகளில் குவிந்திருந்த மேற்கூறிய நகைகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து, இது தொடர்பாக வீட்டில் பணிபுரியும் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.