கல்விக்கடன் வழங்கியதில் ரூ.34 லட்சம் கையாடல்; ஆன்லைன் ரம்மியில் பெட்டிங் கட்டிய வங்கி அதிகாரி கைது!

வேலூர், காட்பாடி காந்தி நகரிலுள்ள எஸ்.பி.ஐ வங்கியில், 38 வயதான யோகேஸ்வர பாண்டியன் என்பவர் உதவிமேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், வீட்டுக்கடன் மற்றும் மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்கியதில், மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2021-ம் ஜூலை மாதம் வரை கல்விக்கடன் வாங்கியவர்கள், செலுத்தியவர்களின் கணக்குகளை வங்கி நிர்வாகம் தணிக்கைக்குஉட்படுத்தியது. தணிக்கைச் செய்ததில், 137 மாணவர்களின் கல்விக்கடனை யோகேஸ்வர பாண்டியன் முறைகேடாக தனது கணக்கிற்கு மாற்றி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யோகேஸ்வர பாண்டியன்

பொதுவாகவே, மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடனை டி.டி எடுத்து, எஸ்.பி.ஐ லைஃப் இன்சுரன்ஸுல் செலுத்த வேண்டும். இதுதான் வங்கி நடைமுறை. அப்படியிருக்க, 137 மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட 34,10,622 ரூபாயை கையாடல் செய்து, ‘பெட்டிங்’ கட்டி ஆன்லைன் ரம்மி விளையாடியிருப்பதும் தெரியவந்தது.

இதுபற்றி, வங்கி நிர்வாகம் தரப்பில் வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவுப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, யோகேஸ்வர பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர், ‘‘ஆன்லைன் ரம்மியில் பெட்டிங் கட்டி பணத்தை இழந்ததால், கல்விக்கடனைக் கொண்டு ஈடுகட்ட முடிவு செய்தேன். ஆனால், அந்தப் பணத்தையும் இழந்துவிட்டேன்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, யோகேஸ்வர பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.