சென்னை: நான் காவல் துறையில் 9 ஆண்டுகளாக சம்பாதித்து, சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த பணம் அனைத்தையும் அரவக்குறிச்சி தேர்தலில் இழந்துவிட்டேன். தற்போது கடனாளியாக இருக்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்கும் நேர்மையான அரசியல் வரத் தொடங்கியுள்ளது. பணம் கொடுத்து தேர்தலை சந்தித்துவிட்டு, நாங்கள் உன்னதமான அரசியல் செய்கிறோம் என்று கூறினால், மக்கள் சிரிப்பார்கள். தனி மனிதனாகவும், பாஜக மாநிலத் தலைவராகவும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நான் எந்த கட்சிக்கும், எந்தஅரசியல் தலைவருக்கும் எதிரானவன் கிடையாது. மற்ற கட்சியினர் அரசியல் செய்வது தவறு என்றுசொல்வதற்கும் எனக்கு உரிமை இல்லை. அரசியல் களத்தில் பெரிய மாற்றத்துக்கும், நேர்மையான அரசியலுக்கும், வாக்குக்கு பணம் கொடுக்காத அரசியலுக்காகவும் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை, எனது 2 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் தெரிந்துகொண்டேன்.
நேர்மையான முறையில் மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பது, எனது தனிப்பட்ட நிலைப்பாடு. பணம் இல்லாத, நேர்மையான அரசியல் முன்னெடுப்பில் மட்டுமே என்னை இணைத்துக்கொள்ளப் போகிறேன். கூட்டணி குறித்துப் பேசும் அதிகாரம் எனக்கு இல்லை. இதற்கான நேரம் விரைவில் வரும். கூட்டணி தொடர்பாக பாஜக தேசிய தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.
அரசியல் என்பதை நேர்மையாக, நாணயமாக, பணம் இல்லாத அரசியலாக முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில், ஆயிரம் ஆண்டுகளானாலும் தமிழகத்தில் மாற்றம் வராது. இதை என் கட்சித் தலைவர்கள், தொண்டர்களிடம் பேசத் தொடங்கிவிட்டேன். வரும் காலங்களில் இன்னும் தீவிரமாகப் பேசப் போகிறேன். அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக காவல் துறை பணியை விட்டுவிட்டு வந்த நான், எந்த தவறும் செய்யத் தயாராக இல்லை.
நான் காவல் துறையில் பணிபுரிந்து, 9 ஆண்டுகளாக சம்பாதித்து, சிறுகச் சிறுக சேர்த்துவைத்திருந்த பணம் அனைத்தையும் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு இழந்துவிட்டேன். தற்போது நான் கடனாளியாக இருக்கிறேன். நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற எனது முடிவை மாற்றிக்கொண்டுதான் அரசியலில் பயணிக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட அரசியல் எனக்குத் தேவையில்லை.
கட்சிக்குள் நான் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள், தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த விவாதத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று காத்திருந்து பார்ப்போம்.
2024 தேர்தல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது எனதுநம்பிக்கை. தலைவராக என்னால்என்ன செய்ய முடியும், என்னசெய்ய முடியாது என்று தெரிந்து கொண்டேன். நேரம் வரும்போது எனது தனிப்பட்ட கருத்தையும், கட்சியின் கருத்தையும் மக்கள் மன்றத்தில் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.