காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த விவகாரம்; 2 பேரின் சொத்துகளை முடக்கி அதிரடி நடவடிக்கை

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வேட்டையில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். எனினும், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், தங்கும் இல்லம் போன்ற வசதிகளை உள்ளூர் மக்கள் செய்து தருவது தெரிய வந்து அதுபற்றி எச்சரிக்கை விடப்பட்டது.

இதுபற்றி ஸ்ரீநகர் போலீசார் விடுத்துள்ள செய்தியில், காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதோ, தளவாடங்களை வழங்குவதோ கூடாது என அனைத்து குடிமக்களிடமும் மீண்டும் வேண்டுகோளாக கேட்டு கொள்ளப்படுகிறது. அப்படி இல்லாமல், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது அல்லது தளவாட உதவிகளை வழங்குவது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் சொத்துகளை முடக்கம் செய்வது அல்லது பறிமுதல் செய்வது முதல், கைது வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு, காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, பயங்கரவாதியை சுட்டு வீழ்த்துவது என்பது போதிய விசயம் இல்லை. அந்த நபருக்கு அடைக்கலம் அளித்த அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களை நீதியின் முன் கொண்டு வரவேண்டும்.

பயங்கரவாத நெட்வொர்க்குகளுக்கு ஆதரவு தரும் எவர் ஒருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எந்த வகையிலாவது உதவ கூடியவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளியின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும். தப்பி சென்ற குற்றவாளியை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில், பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் அளித்தது மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்த விவகாரத்தில்,அப்துல் மஜீத் ரேஷி மற்றும் முகமது ஜமால் மாலிக் ஆகிய இருவரின் வீடுகளை முடக்கி பந்திப்போரா போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் பத்திரிகைகளுக்கு வெளியிட்ட செய்தி குறிப்பில், பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் அளித்தது மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்த விவகாரத்தில், நாங்கள் மேற்கொண்ட விசாரணையின்படி, ராம்புரா பகுதியை சேர்ந்த குற்றவாளி இஜாஸ் அகமது ரேஷி என்பவரின் தந்தையான அப்துல் மஜீத் ரேஷியின் இரண்டடுக்கு இல்லம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் முடக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, பந்திப்போரா பகுதிக்கு உட்பட்ட சிட்டிபண்டி பகுதியை சேர்ந்த குற்றவாளி மக்சூத் அகமது மாலிக் என்பவரின் தந்தை முகமது ஜமால் மாலிக் என்பவரின் வீடும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் முடக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதன்படி, அந்த வீடுகளில், சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டதற்கான நோட்டீசை போலீசார் முறைப்படி ஒட்டியுள்ளனர். இந்த குற்றவாளிகள் இரண்டு பேரும் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று, இந்த வீடுகளின் உரிமையாளர்கள், அவற்றை பரிமாற்றம், குத்தகைக்கு விடுவதில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு உள்ளனர். விற்கவோ முடியாது. சொத்துகளை முன் அனுமதி இன்றி எந்த வகையிலும் அதன் தன்மையை மாற்றி அமைக்கவும் முடியாது என நோட்டீசின்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.