மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நபர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த மயூர் (45) என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். எனவே அப்பகுதியிலுள்ள சாஸ்திரி மைதானத்தில் அடிக்கடி தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார்.
அந்த வகையில் நேற்று இவர் மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் பதற்றமடைந்து திடீரென கீழே அமர்ந்தார். பின்னர் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே சரிந்தார்.
அவரது நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பினால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு மது, புகை என எந்த ஒரு கெட்டப் பழக்கமும் இல்லை என்றும் குடும்பத்தார் கதறி அழுதனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் உடல்நலன் மீது அக்கறை கொள்வது அவசியம்.
newstm.in