கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் தீயில் எரிந்த நிலையில், வாலிபர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து உத்தனப்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய் அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்ம நபர்கள் யாரோ வாலிபரைக் கொன்று தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உயிரிழந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.