தமிழகத்தின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் குறித்து கூறுகையில், “தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில், மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பு, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும், யார், யாரெல்லாம் இந்தத் தொகையைப் பெற தகுதிவாய்ந்தவர்கள், யாருக்கெல்லாம் இந்தத் தொகை பொருந்தாது என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் இதுகுறித்துக் கூறுகையில், “மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், 80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயனடைய வாய்ப்புள்ளது.
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர் இந்தத் திட்டத்தால் பயன்பெற முடியாது. மற்றவர்களுக்கான வரையறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த நிதியாண்டில் 6 மாதங்களே உள்ளதால், திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என அறிவித்துள்ளார்.
பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர், “ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.