தமிழ்நாட்டில் கோவை, மதுரை மாநகரங்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னெடுக்க உள்ள திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.
சென்னைக்கு அடுத்தப்படியாக பெரிய நகரங்களான கோவை, மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும். ஆகவே இந்த இரு நகரங்களையும் அதை சுற்றியுள்ள பகுதிளையும் உள்ளடக்கிய அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில் மிகு கோவை மற்றும் மா மதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்படும்.
பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், அனைவருக்கும் சுத்தமான குடி நீர், பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகள், தொழிற் பூங்காக்கள், தரமான வீட்டு வசதி போன்றவை இத்திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.
தலா ஒரு கோடி ரூபாய் செலவில் இத் திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும். இம்மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 24, 476 கோடி ரூபாயும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு 13,963 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மட்டும் 17,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 8500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையில் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளுக்கு 9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.