கோயம்புத்தூர் : கடந்த வாரம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித் திரிந்தது.
வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக நீர், உணவு உண்ண முடியாமல் தவித்தவந்த யானை உடல் மெலிந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.
யானைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அப்போதைய தகவலின்படி, நாக்கின் மையப் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளதால், ஒரு மாதமாக உணவு சாப்பிட முடியாமல் சோர்வடைந்துள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து, டாப்சிலிப் யானைகள் முகாமில் வைத்து பெண் யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று வாயில் அடிபட்ட அந்த பெண் யானை மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனையடுத்து யானைக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவுட்டுக்காய் (என்ற) நாட்டு வெடி வைத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
வாயில்லா ஜீவனின் வாயில் வெடி வைக்கும் அளவுக்கு மனிதன் எவ்வளவு கொடூர குணம் கொண்டவனாக இருப்பான் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
கடந்த சில மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் யானைகள் தொடர்ந்து பலியாகும் சம்பவம் அதிகரித்து வருவது வனஉயிர் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.