பஞ்சாப்பில் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவரான அம்ரித்பால் சிங், தப்பியோடிய நிலையில் அவர்மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். அண்மையில் காவல்நிலையம் உள்ளே புகுந்த ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது. நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, அம்ரித்பால் சிங்கை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
அங்கு, பதற்றமான சூழல் உருவான நிலையில், ஜலந்தர் பகுதியில் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகளை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். முதல்கட்டமாக அவரது கூட்டாளிகள் 78 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், 500 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். மேலும், அம்ரித்பாலின் ஜல்லுப்பூர் கைரா கிராமத்தில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அம்ரித்பால் சிங்கின் கார் டிரைவர் ஹர்பிரீத் சிங், அவரது மாமா ஹர்ஜீத் சிங் உள்ளிட்ட 5 பேர் பஞ்சாப் போலீசாரிடம் சரணடைந்தனர். பாதுகாப்பு காரணமாக, அவர்கள் 5 பேரும் அஸ்ஸாமின் திப்ருகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் ஐஜி சுக்செயின் சிங் கில், ”பஞ்சாபில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதன் காரணமாகவே அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்ரித்பால் சிங் தப்பியோடிய நிலையில், அவரது வரிஸ் பஞ்சாப் தே அமைப்பைச் சேர்ந்த 114 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, பயங்கரவாத அமைப்புகள் குறித்து விசாரணை நடத்தும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங்கின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், குண்டுதுளைக்காத கோட், துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மீது AKF என எழுதப்பட்டிருப்பதாகவும், அது, Anandpur Khalsa Fauj என்ற பெயரில் தீவிரவாத அமைப்பை அம்ரித்பால் உருவாக்கி இருக்கலாம். அம்ரித்பால் சிங்குக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பின் மூலம் அம்ரித்பால் சிங் உதவிகளைப் பெற்றிருக்கலாம்” எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஆயுத பதுக்கல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அம்ரித்பால் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக அம்ரித்பால் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர், ”இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள்படி ஐஎஸ்ஐ அமைப்பிடம், இந்த அமைப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. அம்ரித்பால் சிங்குக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைத்திருக்கும் என்ற வலுவான சந்தேகமும் காவல்துறைக்கு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM