ஸ்ரீநகர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எம்மார் குழுமம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ரூ.500 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இது சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பிறகு காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் முதல் அந்நிய நேரடி முதலீடாகும்.
துபாய் மால், புர்ஜ் கலிஃபா ஆகியவற்றை உருவாக்கிய எம்மார் குழுமம் ரூ.500 கோடி முதலீட்டில் நகரில் வணிக வளாகம் மற்றும் பல்பயன் பாடுகளுக்கான கட்டிடங்களை கட்ட பணியை தொடங்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வை காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். எம்மார் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அமித் ஜெயின், பாலிவுட் நடிகர்கள் விவேக் ஓப்ராய், நீத்து சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமித் ஜெயின் பேசுகையில், “எங்கள் குழுமத்தின் முதலீடு ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும். நாங்கள் செய்யும் ரூ.500 கோடி முதலீடு மூலம் ரூ.5000 கோடி முதலீடு உருவாகும்’’ என்றார்.