சீன நெட்டிசன்களால் புகழப்படும் பிரதமர் மோடி..!

பீஜிங்,

இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக்கில் 3 ஆண்டுகளாக எல்லை தகராறு நீடித்து வந்த போதிலும், சீனாவை சேர்ந்த சமூகவலைத்தள பயனர்களான ‘நெட்டிசன்’களால் பிரதமர் மோடி புகழப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ‘தி டிப்ளோமட்’ என்ற பத்திரிகையில் மு சுன்ஷான் என்ற பத்திரிகையாளர் எழுதிய ‘சீனாவில் இந்தியா எப்படி பார்க்கப்படுகிறது?’ என்ற கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு சுன்ஷான், சீன சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்து பிரபலமானவர்.

சீனாவில் டுவிட்டரை போன்ற ‘சினா வெய்போ’ சமூக வலைத்தளத்தை 58 கோடியே 20 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அதில், பிரதமர் மோடியை ‘மோடி லவோக்சியன்’ என்று பட்டப்பெயரிட்டு சீன நெட்டிசன்கள் அழைத்து வருகிறார்கள். அதற்கு ‘மோடி-அழிவில்லாதவர்’ என்று பொருள். மற்ற தலைவர்களை விட மோடி மிகவும் அற்புதமானவர் என்று நினைக்கிறார்கள்.

மோடி தலைமையிலான இந்தியா, மற்ற பெரிய நாடுகளிடையே சம அந்தஸ்தை பராமரித்து வருவதாகவும் சீன நெட்டிசன்கள் கூறுகிறார்கள். மோடி பின்பற்றும் கொள்கைகள், இந்தியாவின் முந்தைய கொள்கைகளில் இருந்து மாறுபட்டவை என்பது அவர்களின் கருத்து.

”எனது 20 வருட சர்வதேச பத்திரிகை அனுபவத்தில், எந்த வெளிநாட்டு தலைவரையும் சீன நெட்டிசன்கள் பட்டப்பெயரிட்டு அழைப்பது மிகவும் அபூர்வம். மோடி அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்” என்று மு சுன்ஷான் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.