சென்னை :சென்னையில் முதன்முதலாக திரைப்படம் திரையிடப்பட்ட பாரம்பரிய கட்டிடமான விக்டோரியா அரங்கு (பப்ளிக் ஹால்) ரூ. 32 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் விக்டோரியா அரங்கை புதுப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் ரிப்பன் மாளிகைக்கும் நடுவில் கம்பீரம் தவறாமல் இருக்கும் விக்டோரியா அரங்கின் வயது 135. 1887-ம் ஆண்டு இந்த அரங்கு திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து ராணியின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்ட நிலையில், இந்த அரங்கத்துக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் என பெயரிடப்பட்டது.மெட்ராஸ் போட்டோகிராபிக் ஸ்டோர் நடத்தி வந்த டி.ஸ்டீவன்சன், 10 குறும்படங்களை வைத்திருந்தார். அவற்றை 1896-ம் ஆண்டு காலகட்டத்தில் விக்டோரியா ஹாலில்தான் திரையிட்டார்.
சென்னையில் முதன்முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம் என்ற பெருமையும் அதற்கு உண்டு. 1968ல் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது விக்டோரியா அரங்கிற்கு நிதி ஒதுக்கி புதுப்பித்தார். தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது 2009ல் அரங்கை புதுப்பிக்க நிதி ஒதுக்கினார். ஆனால் அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விக்டோரியா அரங்கு புதுப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டது. சென்னையின் புராதன கட்டிடங்களை தற்போது புனரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் நிலையில் வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா அரங்கை சுமார் ரூ.32 கோடி செலவில் பழமை மாறாமல் புதுப்பித்து, மியூசியம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.