சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு, சதீஷ்குமார் திடீரென தான் மறைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார் ஓடிவந்து அவரை தடுத்து நிறுத்தி அவரை ஓரமாக அழைத்து வந்து உட்கார வைத்தனர். அதன் பின்னர், சதீஷ்கு மாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, “சேலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக தெரிவித்தனர். இதனை உண்மை என்று நம்பிய நான் அந்த நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன்.
ஓராண்டு ஆகியும் எனக்கு எந்த ஒரு வட்டியும் வரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். எனக்கு அந்த பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதைக்கேட்ட பாதுகாப்பு போலீசார் உங்கள் பணத்தை திருப்பித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.