நைரோபி-சோமாலியாவில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கடந்தாண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நீடித்து வருகிறது.
இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உலக சுகாதார மையம், ஐ.நா. அமைப்பு மற்றும் பிரிட்டனின் சுகாதார மற்றும் வெப்ப மண்டல மருத்துவ மையம் இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டன. இதன் விபரம்:
சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில், தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வறட்சி நீடித்து வருகிறது.
சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், இங்கு போதிய உணவின்றி பலர் அவதியுற்று வருகின்றனர். இதே நிலை நீடிக்கும் சூழல் நிலவுகிறது.
குறிப்பாக சோமாலியாவில் மட்டும் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவின்றி தவிக்கின்றனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
இதில், பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இதுதவிர, லட்சக்கணக்கான கால்நடைகளும் இறந்துள்ளன.
இதோடு, அல் – குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்- – ஷபாப் அமைப்பும் அப்பாவி மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துவதால், முன் எப்போதும் இல்லாத வகையில், 3.80 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டும் நிலையில், சோமாலியா நாட்டிற்கும் உதவ வேண்டும்.
இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்