புதுடெல்லி: ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஜனநாயகத்தில் இடம் இல்லை என பாஜ தலைவர் ஜே.பி. நட்டா கூறினார். சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் பேசிய போது, இந்திய ஜனநாயகத்தை அவமானப்படுத்தியதாக கூறி, அதற்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தி வருகிறது. மேலும்,பிரதமர் மோடியும் வெளிநாட்டு மண்ணில் இந்திய அரசியல் பிரச்னைகளை எழுப்பி உள்ளார். எனவே, ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க மாட்டார் என்று காங்கிரஸ் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. இப்பிரச்னை காரணமாக கடந்த 13ம் தேதியில் இருந்து எம்பி.க்கள் அமளியால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமைாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கட்சியின் இளைஞரணி சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட தேசிய இளையோர் நாடாளுமன்றத்தை காணொலி மூலம் துவக்கி வைத்து கட்சி தலைவர் நட்டா பேசுகையில்.‘‘ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஜனநாயகத்தில் இடம் அளிக்கக்கூடாது. காங்கிரஸ் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயகத்துக்கு பாதிப்பு என்று கூறி இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தலையிட ராகுல் தூண்டி விடுகிறார். அவரது இந்த பேச்சின் மூலம் ஜனநாயகத்தின் அனைத்து எல்லைகளையும் அவர் கடந்து விட்டார். அவருக்கு ஜனநாயக ரீதியாக பதில் அளிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மக்கள் யாரும் அவரது பேச்சை கேட்பது இல்லை’’ என்றார்.