சென்னையை அடுத்த மாங்காடு, அடிசன் நகர்ப் பகுதியில் வசித்துவருபவர் செல்வராஜ். இசை பயிற்சி ஆசிரியரான இவரின் மனைவி சாந்தி, துணை நடிகையாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்குப் பிரியா என்ற மகளும், ராஜேஷ் பிராங்கோ, பிரகாஷ் என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். பிரியாவுக்கும், ராஜேஸுக்கும் திருமணமான நிலையில் பிரகாஷ் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார்.
சினிமா திரையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகப் பணியாற்றிவரும் பிரகாஷ், கடந்த சனிக்கிழமை மாலை மாங்காடு பாலாஜி நகரிலுள்ள தன்னுடைய அக்கா பிரியாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு பிரியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரகாஷ், ஒரு கட்டத்தில் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து பிரியாவின் கழுத்தில் குத்தியிருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த பிரியாவின் அத்தை வருவதைப் பார்த்து பிரகாஷ் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.
கழுத்தில் குத்து விழுந்ததில் படுகாயமடைந்த பிரியா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும், பிரியாவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து பிரியாவின் அம்மா சாந்தி, அண்ணன் ராஜேஷ் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிரியாவின் தந்தை செல்வராஜைக் காணவில்லை என்பதை அறிந்தது உடனடியாக அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று தேடியிருக்கிறார்கள். அங்கே, வீட்டின் படுக்கையறையில் செல்வராஜ் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
இந்தச் சம்பவம் குறித்தும் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவமறிந்து வந்த மாங்காடு பகுதி போலீஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தக் கொலைகள் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், தப்பியோடிய பிரகாஷைத் தேடிவந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த பிரகாஷைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.
மதுப் பழக்கத்துக்கு அடிமையான பிரகாஷுக்கு, ஒரு கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இரண்டு வருடங்களுக்கு முன்பாக போரூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகும், அவர் வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை போடுவது, அடிக்கடி தனிமையில் பேசுவது, கோபமாக நடந்துகொள்வது என இருந்து வந்திருக்கிறார். இதனால், அவரை மீண்டும் சிகிச்சைக்குச் சேர்க்கவேண்டும் என்று குடும்பத்தினர் பேசியிருக்கிறார்கள். இதையறிந்த பிரகாஷ், `நன்றாக இருக்கும் என்னை மீண்டும் சிகிச்சைக்கு அனுப்பத் திட்டம் போடுகிறீர்களா?’ என்று ஆத்திரமடைந்திருக்கிறார். ஒருகட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொலைசெய்யவேண்டும் என்று திட்டம் தீட்டியிருக்கிறார்.
அதன்படி வீட்டிலிருந்த தன்னுடைய தந்தையைக் கொலைசெய்துவிட்டு, அருகிலுள்ள அக்காவின் வீட்டுக்குச் சென்று அவரையும் கொலைசெய்திருக்கிறார். அவரின் அம்மா சாந்தி, பிரகாஷுக்கு மருந்து வாங்க வெளியே சென்றதால், அவர் உயிர் தப்பியிருக்கிறார்.
கைதுசெய்யப்பட்ட பிரகாஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை, அயனாவரத்திலுள்ள அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தொடர் சிகிச்சை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.