தமிழக அரசின் 2023 -24-க்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் திமுக ஆட்சிக்காலத்தில் சிறப்பாக இருந்த வரி வருவாய், அதிமுக ஆட்சி காலத்தில் கடுமையாக சரிந்திருப்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் உரையில் இதனை அடிக்கோடிட்டு குறிப்பிட்டார். இது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளதாவது,
மத்திய அரசுடன் ஒப்பீடு
வரலாறு காணாத பணவீக்கம், உக்ரைனில் தொடரும் போர், உலக நிதிச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழல் போன்ற பல சவால்களைகளை வரும் நிதியாண்டில் எதிர்நோக்கியுள்ளோம். கடந்த ஆண்டு தேசிய அளவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறையையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் நலத்திட்டங்களுக்காக அதிக நிதிகளை செலவழித்துள்ளபோதும் பல கடிமான சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருவாய் நிதிப் பற்றாக்குறையை 62 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்துள்ளோம்.
அதிமுக மீது குற்றச்சாட்டு
2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சந்தித்த நிதி நெருக்கடிக்கு அதற்கு முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வரி வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணம். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 8 சதவீதமாக இருந்த மாநிலத்தின் மொத்த வரி வருவாய், அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக சரிவை சந்தித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த வரி வருவாய் 5.58 சதவீதத்திற்கு குறைந்துவிட்டது. திமுக அரசு எடுத்த முயற்சியின் பலனாக இப்போது தமிழகத்தின் மொத்த வரி வருவாய் 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை மேலும் உயர்த்த தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் என தெரிவித்தார்.