தமிழக பட்ஜெட் 2023
தமிழக பட்ஜெட் 2023-24 தாக்கலின்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பை திமுக அரசு வெளியிடாமல் இருந்தது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரிடம் கேட்டபோது உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தனர். தமிழகத்தின் நிதிநிலமை கட்டுக்குள் வந்தபிறகு மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்படும் என கூறியிருந்தனர்.
திமுக தேர்தல் வாக்குறுதி
அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது கூட அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த திட்டத்தை முன்வைத்தே பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக கூறிவிட்டு இப்போது திமுக அரசு அதனை செயல்படுத்த மறுப்பதாக குற்றம்சாட்டினர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார். பல்வேறு அமைச்சர்களும் மகளிர் உரிமை திட்டம் அறிவிப்பு குறித்து தெரிவித்து வந்தனர்.
பிடிஆர் அறிவிப்பு
இந்நிலையில், தமிழக பட்ஜெட் 2023-24 தாக்கலின்போது முறையாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அப்போது, தகுதி வாய்ந்த மகளிருக்கு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதற்காக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் நாட்டிலேயே நேரடி மானியமாக அதிக நிதி வழங்கும் திட்டமாக இந்த திட்டம் மாறியுள்ளது.
இப்போது இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் இதற்கான தகுதி வாய்ந்த மகளிரை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட இருக்கின்றன. இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, ஏற்கனவே அரசு சார்ந்த நலத்திட்ட உதவி தொகை பெறுபவர்கள், அரசு வேலை வாய்ப்பு மற்றும் வருமானவரி செலுத்துவோருக்கு இந்த திட்டம் கிடைக்காது என கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு தேர்தல்
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அப்போது, இந்த திட்டத்தை முன்வைத்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய எதிர்கட்சிகள் காத்திருந்தனர். இதனை முன்பே கணித்துக் கொண்ட திமுக நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இப்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெயரும், அடுத்த தேர்தலுக்கான வெற்றியை உறுதி செய்யும் திட்டமாகவும் இது திமுகவுக்கு அமைந்துவிட்டது.