தமிழக சட்டப்பேர்வையில் இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட நிதி நிலை அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் திட்டம் பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் நாளை மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மார்ச் 22ஆம் தேதி விடுமுறை என்பதால் பட்ஜெட் மீதான விவாதம் வியாழக் கிழமை தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, மார்ச் 23, 24, மற்றும் மார்ச் 27, 28 ஆகிய நான்கு நாள்கள் பட்ஜெட் தொடர்பாக பொது விவாதங்கள் நடத்தப்பட்டு அமைச்சர்கள் பதிலுரை வழங்குவார்கள். மார்ச் 29ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதங்கள் தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறும்.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும், பின்னர் 4 மணிக்கு அவை மீண்டும் தொடங்கி இரவு 7 அல்லது 8 மணி வரையும் அவை நடைபெறும். அனைத்து நாள்களிலும் கேள்வி நேரம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ’‘ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.
வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என
அரசை வலியுறுத்துகிறேன்.
அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு
பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்’’ என தெரிவித்தார்.
அதற்கு எதிர்வினை ஆற்றிய மன்னார்குடி திமுக எம்எல்ஏவும், ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா, ‘‘ஆட்சிக்கு வந்து 9 வருடங்களுக்குப் பிறகும், ‘15 லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி பாஜகவுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையே.!
செயற்கை பற்கள் வைக்கும்போது தெரிந்து கொள்ள வேண்டியவை
வரும் தேர்தலுக்கு முன்பாவது இந்த தொகை வழங்கப்படுமா? இதுவரையிலான 106 மாத வட்டித் தொகையையும் சேர்த்து, 75,00,000 ரூபாயாக வழங்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறேன். அதோடு 15லட்சம் தருவோம் என்று அமித் ஷா விளையாட்டுக்கு சொன்னார் என்று மடைமாற்றாமல், இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 15 லட்சம்+ 18%வட்டியுடன் சேர்த்து 75 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் திமுக சார்பாக வலியுறுத்துகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
அதேபோல் பல்வேறு தரப்பினரும் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘‘வருடம் 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தார்கள் 9 ஆண்டுகளில் சுமார் 18 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் எதுவும் நடக்கவில்லை’’ என ஒருவர் தெரிவித்துள்ளார்.