தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சட்ட மன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார்.
இன்று காலை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் என்னென்ன புதிய அறிவிப்புகள் வெளியாகும், என்னென்ன புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.
முக்கியமாக மகளிருக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உறுதிப்படுத்தி விட்டார். ஆனால் யார் யார் இந்த திட்டத்தின் பயனாளிகள், அதை எவ்வாறு தேர்ந்தெடுக்கப் போகிறார்கள், அரசு ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டம் கிடைக்கப் பெறுமா என்பது குறித்து கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
அதே போல் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அறிவிப்புகளும் வெளியாகலாம் என்று எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.
மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா அது குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
இன்று நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யத பின்னர் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்படும். அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதிமுக உட்கட்சி மோதல் தொடர்ந்து வரும் நிலையில் ஓபிஎஸ் இருக்கையை மாற்ற வேண்டும் என்ற இபிஎஸ் தரப்பு கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு புறக்கணித்த நிலையில் இன்று ஓபிஎஸ் அருகில் இபிஎஸ் அமர்வாரா, அல்லது அவை நடவடிக்கையை புறக்கணித்துவிட்டு அதிமுக வெளியேறிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.