சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.63,246 கோடி ரூபாய் செலவில் நடந்து வருவதாகவும், கோவையில் 9,000 கோடியிலும், மதுரையில் 8,500 கோடி மதிப்பீட்டிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது மெட்ரோ ரயில் திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம்:
> சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம், இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில் முதன்மையானது. ஜவுளி, தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள், உற்பத்தித் துறை என பல்தொழில்களின் இருப்பிடமாகவும் தொழில்முனைவுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
> தூங்காநகரமான மதுரை மாநகரம், தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும். இந்த இரண்டு நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்