தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள்:
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பணியில் உயிர் தியாகம் செய்தால் தற்போது வழங்கப்படும் 20 லட்சம் ரூபாய் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.25000 ரூபாயும், முதல்நிலை தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.7,500 ரூபாயும் உதவித் தொகை வழங்கப்படும்.
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ 40,299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறபடுத்தப்பட்டோர் சமூக பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டம் மூலம் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்ட 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
771 தொழில் நிறுவனங்களில் 8.35 லட்சம் தொழிலாளர்கள் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.