பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பட்ஜெட் 2023 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிஐ கொடுத்து அதற்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமை தொகை அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன். அந்த திட்டத்துக்காக சுமார் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
ஆனால் அதனை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இந்த தொகை மூலம் எத்தனை பேருக்கு கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியிருக்கும் அவர், தேர்தல் வாக்குறுதியில் அனைத்து பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறிவிட்டு இப்போது தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறுவது மோசடி என்றும் விமர்சித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க கோவை மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் அவிநாசி மற்றும் சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கிய வகையில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது.
இதேபோல் ஒவ்வொரு துறைவாரியாக முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வந்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பத்திரபதிவுத்துறையில் நிலம் வாங்கும் ஏழைகளின் சுமையை போக்குவதற்காக பதிவுக் கட்டணம் 4 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இது ஒருவகையில் ரியல்எஸ்டேட் துறைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. பதிவுக் கட்டணம் உள்ளிட்டவை காரணமாக பலர் நிலம் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இப்போது இந்த கட்டண குறைப்பு ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.