ஈரோடு மாவட்டத்தில் செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி அமுதா (43). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் வர்ஷா (15) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வர்ஷா எந்த நேரமும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனால் தாய் அமுதா, தற்பொழுது பொதுதேர்வு வருகிறது, செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி கண்டித்துள்ளார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும் இது பற்றி கூறி, வர்ஷாவின் செல்போனை தலைமை ஆசிரியருடன் ஒப்படைத்துள்ளார்.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக மன வேதனையில் இருந்து வர்ஷா, வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.