சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக அங்கு ராட்சத பள்ளம் தோண்டப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இன்று அதிகாலை புளியந்தோப்பு டிமெல்லோஸ் சாலையில் பயங்கர சத்தம் கேட்டது. அதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது இருவர் கருகிய நிலையில் சுயநினைவின்றி கிடந்தனர்.
உடனடியாக ஆம்புலன்ஸிக்கும் பேசின் பாலம் காவல் நிலையத்துக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டனர். அதில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். இன்னொருவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக பேசின் பாலம் போலீஸார், “விசாரித்தபோது உயிரிழந்தவர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என தெரியவந்தது. இவர் மூர் மார்க்கெட் பகுதியில் இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இன்னொருவர் அதே கடையில் வேலைப்பார்க்கும் மணிகண்டன் (24) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து இன்று அதிகாலை, காப்பர் வயர்களைத் திருட திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதற்காக மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட ராட்ச பள்ளங்களில் கேபிள் வயர்களை வெட்ட முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி டெலிபோன் கேபிள் வயர் எனக் கருதி உயர்அழுத்த மின் கேபிளை இருவரும் அறுத்திருக்கிறார்கள். அதனால்தான் மின்சாரம் இருவர் மீது பாய்ந்திருக்கிறது. தற்போது 40 சதவிகித தீக்காயங்களுடன் மணிகண்டன் சிகிச்சை பெற்றுவருகிறார். மேல்சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்துக்குப்பிறகு உடனடியாக அங்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு அறுக்கப்பட்ட மின் கேபிளை ஊழியர்கள் சரிசெய்தனர்.