'தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!

டெல்லி : நாடு முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதால் திருத்தப்பட்ட விதிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மராட்டியம், குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ள புதிய அறிக்கையில், பரிசோதனை, கண்காணிப்பு, மருத்துவம், குணப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி என 5 அடிப்படை அம்சங்களை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் உடல்நலம் பாதிக்கப்படும் பொதுமக்கள் தொடர் காய்ச்சல், கடுமையான இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை தொடர்ந்து 5 நாட்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து முறையாக பரிசோதனை செய்து, மருந்துகளை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி தனிநபர் இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், தவறாமல் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்கும் படி கூறியுள்ள ஒன்றிய சுகாதார அமைச்சகம், மருத்துவர் ஆலோசனையுடன் ரெம்டெசி வீர் மருந்தை முதல் நாள் 200 மில்லி கிராமும் அடுத்த 4 நாட்களுக்கு தலா 100 மில்லி கிராமும் வீதம் வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.