கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா (18.03.2023) கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.
இதேவேளை, கொழும்பு SSC மைதானத்தில் ஜனாதிபதி, இன்று போட்டியை நீண்ட நேரம் கண்டுகளித்ததுடன், கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி அணிகளை ஊக்குவித்து, அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
இன்றைய போட்டி நிறைவின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் பரிசளிப்பு விழா இடம்பெற்றதுடன் வெற்றிபெற்ற கொழும்பு றோயல் கல்லூரியின் அணிக்கு டி.எஸ். சேனநாயக்க நினைவுக் கேடயம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணியினருக்கும், திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி, மைதானத்தில் கூடியிருந்த விளையாட்டு ரசிகர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடவும் மறக்கவில்லை.