ஜலந்தர்: பஞ்சாபில் பிரிவினைவாத தலைவரும் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீஸார் தேடி வரும் நிலையில், பஞ்சாபில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணி வரை இணையதள சேவையை போலீஸார் முடக்கியுள்ளனர்.
பஞ்சாபை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், பஞ்சாபில் இதற்கான முன்னெடுப்பை தீவிரமாக செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த மாதம் இவரது உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் புறநகர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித் பால் சிங் முற்றுகையிட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது உதவியாளர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீஸார் தேடி வரும் நிலையில், பஞ்சாபில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணி வரை இணையதள சேவையை போலீஸார் முடக்கியுள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும், புரளிகளை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.