புதுடெல்லி: பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவு சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங்கை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.
காலிஸ்தான் என்ற பெயரில் சீக்கியர்களுக்கென தனிநாடு அமைப்பதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த அம்ரித்பால் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தப்பியோடிய அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேநேரத்தில், அவரது கார் ஓட்டுநர், அவரது மாமா உள்ளிட்ட 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பாதுகாப்பு கருதி அவர்கள் 5 பேரும் அஸ்ஸாமின் திப்ருகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பஞ்சாப் ஐஜி சுக்செயின் சிங் கில், ”பிடிபட்ட 5 பேரும் காவலில் எடுக்கப்பட்டு பின்னர் அசாமின் திப்ருகருக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தல்ஜீத் கல்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் புகான்வாலா, பகவந்த் சிங் ஆகிய 4 பேர் முதலில் பிடிபட்டனர். இதையடுத்து, அம்ரித்பால் சிங்கின் மாமா ஹர்ஜீத் சிங்கும் பிடிபட்டார். அனைவரும் திப்ருகருக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
பஞ்சாபில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. அமைதியும் சட்டம் – ஒழுங்கும் நன்றாக இருக்கிறது. வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங்கின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், குண்டுதுளைக்காத கோட், துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீது AKF என பொறிக்கப்பட்டுள்ளது. Anandpur Khalsa Fauj என்ற பெயரில் தீவிரவாத அமைப்பை அம்ரித் பால் உருவாக்கி இருக்கலாம் என்றும் அதனை குறிப்பிடும் நோக்கிலேயே AKF என பொறித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, ஆயுத பதுக்கல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அம்ரித்பால் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக புதிதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அம்ரித்பால் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதோடு, அம்ரித்பால் சிங்குக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பின் மூலம் அம்ரித்பால் சிங் உதவிகளைப் பெற்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பஞ்சாப் மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர், ”இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள்படி ஐஎஸ்ஐ அமைப்பின் கை இதில் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. அம்ரித்பால் சிங்குக்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைத்திருக்கும் என்ற வலுவான சந்தேகமும் காவல்துறைக்கு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
அம்ரித்பால் சிங் தப்பியோடிய நிலையில், அவரது வரிஸ் பஞ்சாப் தே அமைப்பைச் சேர்ந்த 114 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, பயங்கரவாத அமைப்புகள் குறித்து விசாரணை நடத்தும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக பஞ்சாப் ஐஜி சுக்செயின் சிங் கில் தெரிவித்துள்ளார்.
அம்ரித்பால் சிங்குக்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதை அடுத்து, மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையோடு, மத்திய அரசின் அதிரடிப் படையும் குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜலந்தர் நகரில் அதிரடிப் படை வீரர்கள் இன்று அணிவகுப்பு நடத்தினர். இதனிடையே, அம்ரித்பால் சிங்கை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்ரித்பால் சிங் யார்? – கடந்த 1993-ம் ஆண்டு பஞ்சாபின் அமிர்தசரஸ் ஜல்லபூர் கெராகிராமத்தில் அம்ரித்பால் சிங் பிறந்தார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் துபாய்க்கு சென்ற அவர் அங்கு உறவினர் நடத்தும் போக்குவரத்து சேவை நிறுவனத்தில் பணியாற்றினார்.
அண்மையில் பஞ்சாப் திரும்பிய அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி ‘வாரிஸ் பஞ்சாப் டி’அமைப்பின் தலைவராக பதவியேற்றார். சில மாதங்களுக்கு முன்னர்தான் அம்ரித்பால் சிங் குறித்து போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.